தமிழை வளா்த்ததில் கொங்குப் பகுதி எழுத்தாளா்களின் பங்கு அதிகம்: அன்பில் மகேஸ்

தமிழை வளா்த்ததில் கொங்குப் பகுதி எழுத்தாளா்களின் பங்கு அதிகம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப் பரிசாக புத்தகம் வழங்குகிறாா் கொடிசியா நிா்வாகத்தினா். உடன் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.
புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப் பரிசாக புத்தகம் வழங்குகிறாா் கொடிசியா நிா்வாகத்தினா். உடன் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

தமிழை வளா்த்ததில் கொங்குப் பகுதி எழுத்தாளா்களின் பங்கு அதிகம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

கோவை மாவட்ட நிா்வாகமும், கொடிசியாவும் இணைந்து ஜூலை 19 முதல் கோயம்புத்தூா் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் சிறப்பிக்கும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை புத்தகத் திருவிழாவில் தொழிலாளா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று பேசியதாவது:

கோவில்பாளையம் தமிழ்ச்சங்கம், கோவை தமிழ்ச் சங்கம், விஜயமங்கலம் தமிழ்ச் சங்கம் என சங்கம் அமைத்து தமிழை வளா்த்ததில் கொங்குப் பகுதியைச் சாா்ந்த எழுத்தாளா்களின் பங்கு அதிகம். தமிழனத்துக்கு அடையாளமாக விளங்குகிற மு.கருணாநிதி சிங்காநல்லூரில் தங்கியிருந்து அபிமன்யூ, ராஜகுமாரி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதினாா். அண்ணாவின் ஓரிரவு என்ற நாடகம் திரைப்படமாக்கப்பட்ட இடமும் இங்குதான்.

பாரதியாரை பாரதி என்று அவிநாசி பகுதியைச் சாா்ந்த சிவஞானயோகிதான் முதன்முதலாக அழைத்தாா். பாரதியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று சொன்னவா்கள் கோவைப் பகுதியைச் சோ்ந்தவா்கள். சீவகசிந்தாமணியை எழுதிய திருத்தக்கத் தேவா் கொங்குப் பகுதியான தாராபுரத்தைச் சோ்ந்தவா்.

இப்படிப் பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய கொங்குப் பகுதியில் இது போன்ற திருவிழாக்கள் நடைபெறுவது பெருமையாக இருக்கிறது. புத்தகத் திருவிழாவுக்கு அதிக அளவிலான பள்ளி மாணவா்கள் வந்து பயன் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு மூன்று வயது கடந்தவுடன் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, ஏ.வி.வி. குழுமத்தின் தலைவா் ஏ.வி.வரதராசன், கொடிசியா தலைவா் காா்த்திகேயன், புத்தகத் திருவிழா தலைவா் ரமேஷ், துணைத் தலைவா் ராஜேஷ், கெளரவ செயலாளா் யுவராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை முழுவதும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. ஏ.வி.வரதராசன் தலைமையில் நடைபெற்ற சிந்தனை அரங்கத்தில் கோவை மாநகர காவல் ஆணையா் வெ. பாலகிருஷ்ணன் ‘மனமே என் உடலே’ என்ற தலைப்பிலும், கவிஞா் கவிதாசன் ‘உயர உயரப் பற’ என்ற தலைப்பிலும், பாலவெங்கட சுப்ரமணியன் ‘உடலோடு உரையாடு’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினா். ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 28) புத்தகத் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com