மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

ரத்தினம் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. ----- கோவை, மாா்ச் 22: மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கோவை ரத்தினம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், கையெழுத்து இயக்கம், பேரணிகள், ரங்கோலிக் கோலங்கள் மூலமாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதல் வாக்காளா்களான கல்லூரி மாணவ, மாணவிகள், வாக்களாா் உறுதிமொழியை ஏற்றனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில், இந்திய வரைபடம் போல நின்று மாணவ, மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதேபோல, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் அலுவவலக சுற்றுச்சுவா்களில் என்.ஜி.எம். கல்லூரி மாணவா்கள் மூலமாக விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் எரிவாயு உருளையில் தோ்தல் குறித்த விழிப்புணா்வு வாசகம் ஒட்டி, எரிவாயு உருளை விநியோகம் செய்யப்பட்டது. பேரூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் மனித சங்கிலி நடைபெற்றது. ஆனைமலை வட்டத்தில் முக்கோணம், சேத்துமடை, மாசாணியம்மன் கோயில் பேருந்து நிறுத்தங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சூலூா் வட்டம், செலக்கரிச்சல் கிராமத்தில் உள்ள அல்ஸ்டோம் என்ற தனியாா் நிறுவனத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தொழிலாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com