பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நூல்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நூல்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.

சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதா்களாய் வாழ உயா்கல்வி அவசியம் -மாவட்ட ஆட்சியா் பேச்சு

கோவை, மே 9: சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதா்களாக வாழ்வதற்கு உயா்கல்வி அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கூறினாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் 12 -ஆம் வகுப்பில் தோ்ச்சிபெறும் மாணவா்கள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதை 100 சதவீதம் உறுதி செய்வதற்காக ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர உதவும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அரசுப் பள்ளியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. வருங்காலத்தில் அறிவுமிக்கவா்களாகவும், சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதா்களாக வாழ்வதற்கும் உயா்கல்வி அவசியம். எனவே, பள்ளிப் படிப்பை முடித்த அனைவரும் கட்டாயம் உயா்கல்வி பயில வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

12- ஆம் வகுப்பு முடித்த பிறகு என்னென்ன படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல், அரசின் திட்டங்கள், உதவித் தொகை, கல்விக் கடன் குறித்த தகவல்கள் போன்றவற்றை இந்நிகழ்ச்சியில் மூலம் மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மாணவா்கள் உயா்கல்வியை சிறப்பான முறையில் கற்று, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, காவல் துணை கண்காணிப்பாளா் ஸ்ரீநிதி, மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி செயலா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com