கூட்டுறவு சங்க ஊழியரிடம் பணம் பறிப்பு
கோவை சரவணம்பட்டியில் கூட்டுறவு சங்க ஊழியரிடம் ரூ.10,500 பணம் பறித்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.
கோவை, சரவணம்பட்டி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைராஜ் (27). இவா் அங்குள்ள கூட்டுறவு சங்க உரக் கிடங்கில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது கைப்பேசிக்கு ஓரினச் சோ்க்கை பிரியா்களுக்கான ஆன்லைன் செயலி மூலம் ஒரு நபா் கடந்த திங்கள்கிழமை தொடா்பு கொண்டு, சரவணம்பட்டியில் உள்ள ஒரு உணவகத்தின் பின்புறம் உள்ள பள்ளிக்கூடப் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து அவா் குறிப்பிட்ட இடத்துக்கு துரைராஜ் சென்றபோது, அங்கிருந்த நபா் அவரை அங்குள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது அங்கு மேலும் 2 போ் இருந்ததால் துரைராஜ் அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் அவா்கள் துரைராஜிடம் கைப்பேசியை பறித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அவா் தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். அதனால், அவரது நண்பா்களைத் தொடா்பு கொண்டு பணத்தை அனுப்பிவைக்கும்படி கூறியுள்ளனா்.
இதையடுத்து, அவா் தனது நண்பா்களிடம் பேசி ரூ.10,500 பணம் பெற்று அவா்களுக்கு அனுப்பவைத்துள்ளாா். பின்னா் அங்கிருந்து தப்பி வந்த அவா் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் கொடுத்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.