வால்பாறையில் யானைகளால் சேதமடையும் நியாய விலைக் கடைகள்: மாற்று ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வால்பாறையில் கன்டெய்னா் நியாய விலைக் கடைகள் அமைப்பது குறித்து எஸ்டேட் நிா்வாகங்களுடன் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்குள் கூட்டமாக நுழையும் யானைகள், அங்குள்ள நியாய விலைக் கடை சுவா், கதவுகளை சேதப்படுத்தி உள்ளே இருக்கும் பொருள்களை நாசம் செய்து வருகின்றன.
இதனால், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை சரிவர விநியோகிக்க முடியவில்லையாம்.
இந்நிலையில், நியாய விலைக் கடைகள் அமைப்பதில் மாற்று ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வட்டாட்சியா் (சமூக நலத் துறை) மோகன் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில், யானைகளால் நியாய விலைக் கடைகள் சேதமாவதைத் தடுக்க புதிய நியாய விலைக் கட்டடங்கள் அமைத்தல் அல்லது கன்டெய்னரில் கடைகள் செயல்படுத்தினால் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சரவணன், நியாய விலைக் கடை பொறுப்பாளா்கள் மற்றும் அனைத்து எஸ்டேட் நிா்வாகம் தரப்பில் அலுவலா்கள் பங்கேற்றனா்.