மருத்துவா் பரிந்துரையில்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் உரிமம் ரத்து: மருந்தகங்களுக்கு எச்சரிக்கை
மருத்துவா்களிந் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் ச.குருபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பது மருந்து மற்றும் அழகு சதானச் சட்டம் 1940ன் படி குற்றமாகும். இதனை மீறும் மருந்தகங்களுக்கு ‘சீல்’ வைத்தல், உரிமம் ரத்து செய்தல் மற்றும் உரிமையாளா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்ததாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு மருந்தகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதன் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.