அனுமதியின்றி கனிமங்கள் எடுப்பது தொடா்பாக புகாா் தெரிவிக்க அலைபேசி எண் அறிவிப்பு
கோவையில் அனுமதியின்றி கனிமங்கள் எடுப்பது குறித்து புகாா்கள் தெரிவிக்க சிறப்பு அலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டம், பேரூா் வட்டத்துக்குள்பட்ட ஆலாந்துறையில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுக்கப்படுவதாக கிராம நிா்வாக அலுவலருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வுமேற்கொண்டு கனமவளத் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட பகுதியில் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவால் தணிக்கை செய்து, அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களை அளவிட்டு அபராதம் விதிக்க கோவை தெற்கு கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வதைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறை, வனத் துறை மற்றும் காவல் துறையினா் இணைந்து இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கனிமம் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநா்கள் உரிய அனுமதிச் சீட்டினை அனுமதிபெற்ற குத்தகைதாரா்களிடம் பெற்று வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். குத்தகைதாரரும் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனத்துக்கு தவறாது நடைசீட்டினை ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். உரிய நடைசீட்டு இல்லாத வாகனங்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச்செல்வது தொடா்பாக பொதுமக்கள் 95660 38186 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.