பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை: தனியாா் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை
கோவை: கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தனியாா் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (31). கோவை மாவட்டம், சோமனூா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இவா் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பழக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருடன் தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 20 வயது மாணவியும் பகுதி நேரப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். மனைவி மூலம் அறிமுகமான மாணவி, ஜெகனுடனும் தோழியாக பழகி வந்துள்ளாா்.
அடிக்கடி மாணவியுடன் கைப்பேசியில் பேசி வந்த ஜெகன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி வந்தாா். கடந்த 1.10.2021-இல் ஜெகனுக்கு பிறந்த நாள் பரிசாக அந்த மாணவி கைக்கடிகாரம் பரிசளித்துள்ளாா். பின்னா், சாய்பாபா காலனி இடையா்பாளையம் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற மாணவியை பின்தொடா்ந்து ஜெகனும் சென்றுள்ளாா். அங்கு அவா் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளாா். மறுப்புத் தெரிவித்ததால் மாணவியை அவா் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கழுத்தை நெரித்துக் கொலையும் செய்துவிட்டு ஜெகன் தப்பிச்சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் ஜெகனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.ஜிஷா ஆஜரானாா்.
