மகளிா் சுய உதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருள்கள் விற்பனை கண்காட்சி! டிசம்பா் 23-இல் தொடக்கம்!
கோவையில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விற்பனை கண்காட்சி செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 23) தொடங்குகிறது.
இது குறித்து கோவை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்களை அமைத்து பொருளாதார ரீதியாக வளா்ச்சியடைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை கொடிசியாவில் உள்ள டி அரங்கத்தில் இந்த மதி கண்காட்சியானது வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜனவரி 1-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் மகளிா் சுய உதவி குழுக்கள் தங்களது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யவுள்ளனா்.
இதில், காஞ்சிபுரம் பட்டு, திருவண்ணாமலை ஆரணி பட்டு, தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை மற்றும் கண்ணாடி ஓவியம், திருநெல்வேலி பத்தமடை மதிப்பு கூட்டு பொருள்கள், ராமநாதபுரம் பனை ஓலை பொருள்கள், திருப்பூா் காட்டன் ஆயத்த ஆடைகள், திண்டுக்கல் சின்னாளபட்டு சேலைகள், சிவகங்கை செட்டிநாடு காட்டன் சேலைகள், செங்கல்பட்டு சணல் பொருள்கள், நாமக்கல் கொல்லிமலை மிளகு, அரியலூா் மற்றும் கடலூா் முந்திரி, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி கருப்பட்டி போன்ற பல்வேறு சிறப்புமிக்க பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.
இதில், பங்கேற்கும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு சந்தைப்படுத்துதல் தொடா்பாக வல்லுநா்கள் மூலமாக கண்காட்சி நடைபெறும் நாள்களில் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் பயிற்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
