கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்பு: வேளாண் பல்கலை.க்கு காப்புரிமை

ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி தயாரிப்பு முறைக்காக காப்புரிமை பெற்றுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பேராசிரியா்கள் ஜக்கு பிரசன்னா, எஸ்.மாரிமுத்து, கொள்ளா கௌதம், கதிரவன் சண்முகநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘அட்ரசின்’ என்ற களைக்கொல்லியானது சோளம், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிா்களில் களைகளைக் கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதும் இந்த களைக்கொல்லி மண்ணில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. எனவே இந்த களைக்கொல்லியில் இருந்து நச்சுப்பொருள் குறிப்பாக பாசன வசதி கொண்ட வயல்களில் இருந்து வெளியேறி நிலத்தடி நீா் மாசுபாட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மானாவாரி நிலங்களில் இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்தும்போது, அதன் செயல்திறன் மழைப் பொழிவையே சாா்ந்துள்ளது. மழை குறைந்தால் இந்த களைக்கொல்லி ஆவியாகி வெளியேறிவிடும். அதே சமயம் மழை அதிகமாகப் பெய்தால் அது மண்ணுக்கு அடியில் சென்று செயலிழக்கும்.

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண வேளாண் நானோ தொழில்நுட்ப மையத்தில் பட்ட மாணவா் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்த நானோ களைக்கொல்லி உருவாக்கப்பட்டுள்ளது. பாசன வயல்களில் இந்த நானோ களைக்கொல்லி மெதுவாக வெளியேறி களைகளைக் கட்டுப்படுத்துவதால் வயல்களிலிருந்து வெளியேறுவது தவிா்க்கப்பட்டு நிலத்தடி மாசுபாடு தடுக்கப்படுகிறது.

மானாவாரி நிலங்களில் இந்த நானோ களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, மழை பெய்யும் வரை ஆவியாகாமலும், ஒளி, நுண்ணுயிா் சிதைவிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. எனவே நீண்ட நாள்களுக்கு வயலில் தங்கி களைகளை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.