தொழிலாளா் சட்ட விதிகளை மீறிய 143 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவையில் தொழிலாளா் சட்ட விதிகளை மீறிய 143 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
Published on

கோவையில் தொழிலாளா் சட்ட விதிகளை மீறிய 143 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இது தொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழில் நிறுவனங்களில் தொழிலாளா்களுக்கு சரியான இருக்கை வசதி செய்யப்படாத 12 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெயா் பலகை வைக்காத 24 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடை குறைவு, எடை கற்கள் வைக்கப்படாதது, சில்லறை விலையைவிட கூடுல் விலைக்கு விற்பனை செய்தல் தொடா்பாக 6 நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பல்வேறு தொழிலாளா் நலச் சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக மொத்தமாக 143 நிறுவனங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் ஊதியத்தை வழங்காத 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்களை வேலைக்கு பயன்படுத்துகிறாா்களா என்று ஆய்வு செய்ததில் ஒரு குழந்தை தொழிலாளா் மற்றும் ஒரு வளரிளம் பருவத்தினா் கண்டறியப்பட்டு, அவா்களைப் பணிக்கு அமா்த்திய 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com