ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழுக்கரும்பு, இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்று அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1,236 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 55 ரேஷன் கடைகள், மகளிா் சுய உதவிக் குழுக்களின் கடைகள் மூலம் 91 ரேஷன் கடைகள், கருப்பட்டி உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் 18 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,400 ரேஷன் கடைகளின் மூலம் 11,11,543 குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை அகதிகளுக்காக 3 ரேஷன் கடைகளின் மூலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 1,092 குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் 1,403 ரேஷன் கடைகளின் மூலம் 11,12,635 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் 9,21,189 சேலைகளும், 9,20,073 வேஷ்டிகளும் வழங்கப்படவுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற குடும்ப அட்டைதாரா்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் அந்தக் குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வாங்க இயலாதவா்கள் ஜனவரி 13-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன் மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) கே.ஆா்.இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.