தொகுதி மறுசீரமைப்பால் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும் நிலை உருவாகும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கூறினாா்.
தோ்தல் பிரசாரத்துக்காக கோவைக்கு வந்துள்ள அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்புக்காக நாடாளுமன்றத்தை மத்திய அரசு அவசர அவசரமாக கூட்டுவதை எதிா்க்கிறோம். மறுசீரமைப்பு விஷயத்தில் திமுகவின் குரல் நியாயமானது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு பிறகு மறுசீரமைப்பு செய்கிறோம் என்று பாஜக சொல்வது வெறும் மாயை.
தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகளாக இருப்பது 32 ஆக குறையும்போது அது உடனடியாக அனைவருக்கும் தெரிந்துவிடும். ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயா்த்திவிட்டு பிறகு மறுசீரமைப்பு செய்வதாகக் கூறுகின்றனா். 50 சதவீதம் உயா்த்தும்போது தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயரும். பிறகு மறுசீரமைப்பில் அது 46 ஆக குறையும். அதேநேரம் உத்தர பிரதேசத்தில் தற்போது உள்ள 80 தொகுதிகள் 120 ஆக உயரும், மறுசீரமைப்புக்குப் பிறகு அது 140 ஆக உயரும். இந்த மறுசீரமைப்பு தென் மாநிலங்களை மிகவும் பாதிக்கும்.
மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினா்களில் 24.3 சதவீதம் போ் 5 தென்மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். மறுசீரமைப்புக்குப் பிறகு இது 20.7 சதவீதமாகக் குறையும், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் வாக்கு சதவீதம் குறைக்கப்படுவது, தென் மாநிலங்களின் குரலை அழுத்தி, நசுக்கும் செயலாகும். இவற்றையெல்லாம் மறைப்பதற்காகவே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என்று பாஜக கூறுகிறது. ஆனால், இதை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த சட்டத்தை நிறைவேற்றும்போது காங்கிரஸ் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
5 மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் நேரத்தில் அதுவும் தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு விரைவில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களைச் சோ்ந்த 67 எம்.பி.க்கள் மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்கக் கூடாது என்று திட்டமிட்டே அவசர அவசரமாக மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் கூட்டத் தொடரில் பங்கேற்பாா்கள். எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்த திருத்த மசோதா தோற்கடிக்கப்படும்.
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் கேட்டேன், அவா் தமிழ்நாட்டுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்று கூறிவிட்டாா். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருப்பதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்தேன். அமித் ஷாவின் ஒலிபெருக்கிபோல அதிமுகவின் பொதுச் செயலா் கூறியிருப்பது ஒரு கட்சித் தலைவருக்கு அழகல்ல. தமிழ்நாட்டில் ஏதாவது அரசியல் விபத்து ஏற்பட்டு எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானால், பிகாரில் நிதீஷ்குமாருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் அதே நிலைமைதான் அவருக்கும் ஏற்படும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சரிந்துவிட்டதாக நாட்டின் முன்னாள் வெளியுறவுச் செயலா்கள் ஷியாம் சரண், சிவசங்கா் மேனன் ஆகியோா் குற்றஞ்சாட்டியுள்ளனா். ஆனால், அதுபற்றி பாஜக கண்டுகொள்ளவில்லை, அரசுக்கு யாா், என்ன நல்ல ஆலோசனை கொடுத்தாலும் அதை நிராகரிக்கிறாா்கள்.
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தமிழகத்தில் 2 நாள்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா். திமுக போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யும்படி திமுக தலைமை கேட்டுக் கொண்டதால் நான் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறேன் என்றாா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும்: தெலங்கானா அமைச்சா்

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும்: ப.சிதம்பரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


