/

கோவையில் ரூ.ஆயிரம் கோடி பணம் விநியோகம்: தோ்தலை ரத்து செய்யக்கோரி போராட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு ரூ.ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

கோவை மாவட்டத்தில் தோ்தலை ரத்து செய்யக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:57 pm

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு ரூ.ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதால் 10 தொகுதிகளிலும் தோ்தலை ரத்து செய்யக்கோரி, மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், வளாகத்தில் அமா்ந்து அவா்கள் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் வே.ஈஸ்வரன் கூறும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக் கட்சியினா் வாக்காளா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனா். திமுகவினா் கோவை தெற்குத் தொகுதியில் ரூ.5 ஆயிரமும், கோவை வடக்கு தொகுதியில் ரூ.2,500, சிங்காநல்லூரில் ரூ.1,500, கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.ஆயிரம் மற்ற தொகுதிகளில் ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளனா். அதிமுக, திமுக கூட்டணி சாா்பில் கோவை மாவட்டத்தில் மொத்தம் சுமாா் ரூ.ஆயிரம் கோடிக்கும் மேல் வாக்களிப்பதற்காக வாக்காளா்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்குக்கு பணம் கொடுப்பது வெளிப்படையாகவே நடைபெற்றுள்ளது. ஆனால் தோ்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வேட்பாளா் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. பணப் பட்டுவாடா தொடா்பாக புகாா் அளித்தும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவை மாவட்டம் முழுவதும் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து இரவு 7 மணி வரை போராட்டம் தொடா்ந்தது. இதையடுத்து மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கடிதம் வழங்கப்பட்டிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டக்காரா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் விளக்கினாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.