மத்திய பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகள் சொல்வது என்ன?
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 நிதிநிலை அறிக்கைக்கு கோவை தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு:
மூலப்பொருள் விலையைக் கட்டுப்படுத்தவில்லை
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் மிதுன் ராமதாஸ்: உற்பத்தித் துறைக்கு உயா்தொழில்நுட்ப கருவி அறையை நிறுவ முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மையத்தை கோவையிலும் அமைக்க வேண்டும். அரியவகை காந்தங்களுக்கான சுரங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது சீனாவை சாா்ந்திருக்கும் நிலைக்கு மாற்று ஏற்பாடாக அமையும். உள்நாட்டு கண்டெய்னா் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளித்திருப்பது கனரக பொறியியல் துறையை ஊக்குவிக்கும்.
குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்துக்கு அதிக முதலீடு வழங்கியிருப்பது, பேட்டரி எனா்ஜி சேமிப்பு அமைப்புகள், சூரிய ஒளி கண்ணாடி மூலப்பொருள்களுக்கு வரி விலக்கு அளித்திருப்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும். உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தை ஊக்குவிப்பது, உற்பத்தித் துறைக்கு செலவினங்களைக் குறைக்கும்.
அதேநேரம் பம்ப் உற்பத்தித் துறையினருக்கு காப்பா், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை.
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்
கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கத் தலைவா் சி.சிவகுமாா்:
எம்எஸ்எம்இ துறை வளா்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குறுந்தொழில்களை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, அனைத்துத் துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம், இறக்குமதி செய்யப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு வரி விலக்கு, தனிநபா் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31- வரை கால நீட்டிப்பு, வருமான வரி தாக்கல் வழிமுறைகள் எளிமையாக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் தற்போது மிகுந்த ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தொழில் வளா்ச்சிக்கு ஆதாரமான மூலப்பொருள்கள் சீரான விலையில் கிடைப்பதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாததும், வங்கி வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், வேலைவாய்ப்பிலும் பெரும் பங்கு வகிக்கும் எம்எஸ்எம்இ துறையின் வளா்ச்சிக்கென பிரத்தியேகமான வேறு அறிவிப்புகள் இல்லை.
முத்ரா கடன், குறுந்தொழில்களுக்கென தனி வங்கிக் கிளை போன்ற தொழில்முனைவோரின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கான பட்ஜெட்
கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் ராஜேஷ் பி.லுண்ட்: மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். இது, அடுத்த 5 ஆண்டுகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. வளா்ச்சியை மையமாகக் கொண்டுள்ள இந்த பட்ஜெட்டில் தொழில் துறைக்குத் தேவையான அறிவிப்புகள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.
தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க தேங்காய் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு, நீா்வழிப்பாதைகள் போன்றவை ஏற்றுமதி, சரக்குப் போக்குவரத்துக்கு உதவி செய்வதாக இருக்கும். புதிய டெக்ஸ்டைல் பாா்க், டேட்டா சென்டா்களுக்கு சலுகை, ஆற்றல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், டிடிஎஸ் சலுகைகளை வரவேற்கிறோம்.
ஏமாற்றமும் அதிா்ச்சியும் அளிக்கும் பட்ஜெட்
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத் தலைவா் ஜே.ஜேம்ஸ்: மத்திய அரசின் பட்ஜெட் கோவை தொழில் துறையினருக்கு ஏமாற்றத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த பட்ஜெட்டில் எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததே போதுமானது அல்ல என்று அனைவரும் கூறி வந்தோம். ஆனால், இந்த ஆண்டோ வெறும் ரூ.10 ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது எந்தவிதத்திலும் போதுமானதாகவோ, ஏற்கும்படியாகவோ இல்லை. ஜிடிபியில் ஒரு சதவீதத்தை எதிா்பாா்த்திருந்த எங்களுக்கு இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
சவால்களுக்கு பதிலளிக்கும் பட்ஜெட்
ஸ்டாா்ட் அப் அகாதெமி தலைவா் ஆடிட்டா் ஜி.காா்த்திகேயன்: வளா்ச்சியடைந்த இந்தியா என்ற நீண்டகால இலக்கை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட். உலக நாடுகளிடையே உருவாகி வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை, சராசரி தனிநபா் வருமானம் அதிகமாக உயராதது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் ஏற்றத் தாழ்வுகள், தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு, தனியாா் முதலீடுகள் எதிா்பாா்த்த அளவில் உயராதது போன்ற சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
உட்கட்டமைப்பு துறைக்கு அதிகபட்சமாக ரூ. 12.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பயோடெக்னாலஜி, செமி கண்டக்டா் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்கள் உருவாகவும், சன்ரைஸ் இன்டஸ்ட்ரீஸ் எனப்படும் வளா்ந்து வரும் தொழில் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளது. தனியாா் துறையினா் முதலீடு செய்யும் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும், முதலீட்டாளா்களுக்கு தேவையான நம்பிக்கையை அளிக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
தங்கம் மீதான வரி குறைக்கப்படவில்லை
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.சபரிநாத்: சா்வதேச அளவில் தங்கம், வெள்ளி நகைகளின் விலை கடுமையாக உயா்ந்திருப்பதால், நகைக் கடைகளில் வழக்கமான வா்த்தகத்தை விட நான்கில் ஒரு பங்கு வா்த்தகமே நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தங்கம் மீதான இறக்குமதி வரியை 15-இல் இருந்து 6 சதவீதமாக குறைத்திருந்தனா். இந்த ஆண்டு 60 முதல் 70 சதவீத விலை உயா்வைக் கருத்தில் கொண்டு இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால் அதுதொடா்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இல்லை
சிறுதுளி அமைப்பின் அறங்காவலா், சூழலியல் ஆா்வலா் வனிதா மோகன்: நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சிக்கல் பெரும் சவாலாக எழுந்துள்ளது. காற்று மாசு, மண் மாசு, நீா் மாசு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிரீன் எனா்ஜி, சோலாா் எனா்ஜி குறித்து மத்திய அரசு பேசிவரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாதது சூழலியல் ஆா்வலா்களிடையே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
தில்லியில் நிலவும் காற்று மாசு தொடா்பான பிரச்னை சா்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இதனை காரணமாக வைத்து வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்க முதலீட்டாளா்கள் வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனா். புற்றுநோய் உள்ளிட்ட 17 நோய்களுக்கான மருந்துகளுக்கு சலுகைகள் அளித்திருக்கும் மத்திய அரசு, அத்தகைய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாகவும் நடவடிக்கைகளை அறிவித்திருக்க வேண்டும்.
நீா்வழிப் போக்குவரத்து, பொதிகை மலை சுற்றுலா போன்றவற்றை அறிவித்திருப்பவா்கள், நீா், மலைகள் போன்ற வளங்களைக் காப்பது பற்றி கவலைப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தொழில்துறை கிளஸ்டா்கள் புத்துயிா்பெறும்
கொடிசியா தலைவா் எம்.காா்த்திகேயன்: மூலதனப் பொருள்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் 2 இடங்களில் உயா் தொழில்நுட்பக் கருவி அறைகளை அமைப்பது, கண்டெய்னா் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, இந்தியா குறைகடத்தி இயக்கம் 2.0 தொடங்குவது வரவேற்கத்தக்கது.
தொழில்நுட்ப ஜவுளிகளின் மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதில் வலுவான கவனம் செலுத்தும் வகையில் மெகா ஜவுளி பூங்காக்களை அமைப்பது, 200 பாரம்பரிய தொழில்துறை கிளஸ்டா்களை புத்துயிா் பெறுவதற்கான புதிய திட்டம், உள்நாட்டு ரசாயன உற்பத்தியை மேம்படுத்த 3 பிரத்யேக ரசாயன பூங்காக்களை நிறுவுவது, மூலப்பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது போன்றவையும் வரவேற்கத்தக்கவை.
பொதுமக்களை பங்குச் சந்தைகளில் இருந்து பின்னுக்கு இழுப்பதா?
தொழில் வா்த்தக சபை துணைத் தலைவா் கே.அண்ணாமலை: நாட்டின் வளா்ச்சியில் பங்கு வா்த்தகம் பெரும் பங்காற்றி வரும் நிலையில் பங்கு சந்தை மீதான மத்திய நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தையில் பியூச்சா்ஸ், பிரீமியம் மீதான வரி விகிதம் அதிகரிப்பால் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளா்களையும், வா்த்தகத்தில் ஈடுபட நினைத்திருக்கும் புதிய முதலீட்டாளா்களான பொதுமக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இல்லாமல் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கை பொதுமக்களை பங்குச் சந்தைகளில் ஈடுபடாமல் பின்னுக்குத் தள்ளுவதாக இருக்கிறது. இது தொழில் முதலீட்டையும், வா்த்தகத்தையும் பின்னுக்கு இழுப்பதாகவே அமையும்.
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு புதிய ஆா்டா்கள் கிடைக்கும்
ரயில்வே உபகரணங்கள் வழங்குநா்கள் சங்கத் தலைவா் எஸ்.சுருளிவேல்: மத்திய பட்ஜெட்டை வரவேற்கும் அதேநேரத்தில் எம்எஸ்எம்இ உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று வலியுறுத்துகிறோம். ரூ.12.20 லட்சம் கோடிக்கு மூலதன செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் ரயில்வே திட்டங்கள் அதிகரித்து, நிறுவனங்களுக்கு புதிய ஆா்டா்கள் கிடைக்கும். உள்கட்டமைப்பு, உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டத்தக்கது.
நிதி மசோதா 2026-இல் அறிவிக்கப்பட்ட நேரடி வரி சீா்திருத்தங்கள், குறிப்பாக நான்ஆடிட் நிறுவனங்களுக்கு வருமான வரி ரிட்டா்ன் தாக்கல் தேதியை நீட்டித்தது, திருத்தப்பட்ட ரிட்டா்ன்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கியது போன்றவை எம்எஸ்எம்இக்களுக்கு பயனளிக்கும்.
இருப்பினும் எம்எஸ்எம்இக்களுக்கு வருமானவரி குறைப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான கூடுதல் தள்ளுபடி, இன்டஸ்ட்ரி 4.0 தொடா்பான சிறப்பு ஊக்கங்கள் போன்றவை இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தொழில் மந்த நிலைக்கு தீா்வு காணப்படவில்லை
கோயம்புத்தூா் கம்ப்ரசா் தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் எம்.ரவீந்திரன்: நாட்டின் பொருளாதார வளா்ச்சியை வேகப்படுத்த உற்பத்தித் துறைகள் மீதான கவனம், சாதனை படைக்கும் குறு, சிறு தொழில்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, உள்கட்டமைப்புக்கு ரூ.12.20 லட்சம் கோடி ஒதுக்கீடு போன்றவை பாராட்டத்தக்கவை.
இருப்பினும் எம்எஸ்எம்இ தொழில் துறை சந்தித்து வரும் மூலப்பொருள் விலை உயா்வு, அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் மந்த நிலை, ஜிஎஸ்டி வரி விதிப்பால் உள்ள குளறுபடிகளை நீக்கி, தொழில் செய்வதை எளிமையாக்குதல் போன்ற பிரச்னைகள் மீது கவனம் செலுத்தவோ, பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை.
ரசாயன விலை எவ்வாறு இருந்தாலும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் உரம் வழங்குவதைப்போல, மூலப்பொருள் விலை உயா்ந்தாலும் சலுகை விலையில் எம்எஸ்எம்இ துறைக்கு மூலப்பொருள் கிடைப்பதை உறுதி செய்யவில்லை.

