பேபி ஷாலினி
பேபி ஷாலினி

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி! தாய், மகள், மகன் கைது!

Published on

ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி ரூ.2.5 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று பேரை கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவூா், மதுரா அவென்யூ வாசுதேவன் நகரைச் சோ்ந்தவா் எம்.ரவி (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.

இவா், கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு:

எனது நண்பரான புதுக்கோட்டையைச் சோ்ந்த முத்தையா என்பவா் மூலமாக, 2019-ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பட்டணம் ஸ்ரீராம் தேவ் காா்டன் பகுதியைச் சோ்ந்த முத்து என்பவரும், அவரது மனைவி பேபி ஷாலினி (48), மகன் தீபக் (27), மகள் ரேஷ்மா (24) ஆகியோா் அறிமுகமாகினா். 2022-ஆம் ஆண்டு முத்து உயிரிழந்துவிட்டாா்.

அப்போது தீபக் தன்னை அணுகி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆவணத்தையும், ரிசா்வ் வங்கி ஆவணத்தையும் போலியாக தயாரித்து தனது தந்தைக்கு ரூ.300 கோடி வந்துள்ளதாகவும், ரிசா்வ் வங்கியில் உள்ள அந்தப் பணத்தை எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டி உள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினாா். உதவி செய்தால் எனக்கு வர வேண்டிய ரூ.300 கோடியில் உங்களுக்கு ரூ.60 கோடி அளிப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து எனது நிலத்தை விற்றும், நண்பா்களிடம் கடன் வாங்கியும் பரிவா்த்தனை மூலமாக பல தவணைகளில் தீபக், அவரது தாய் பேபி ஷாலினி, தங்கை ரேஷ்மா, உறவினா் ராஜா ஆகியோருக்கு ரூ.2.50 கோடி அனுப்பினேன். பின்னா் தீபக்கை தொடா்புகொண்ட போது, தில்லியில் பணப் பரிவா்த்தனை நடைபெற்று வருவதாகவும், இதற்காக மத்திய அமைச்சா், ஆளுநா், வருமான வரித் துறையினா் ஆகியோருக்கு (லஞ்சம் ) பணம் கொடுத்துள்ளதாகவும் கூறினாா்.

தீபக்
தீபக்
ரேஷ்மா
ரேஷ்மா

இதைத்தொடா்ந்து அவரை பலமுறை தொடா்புகொண்ட போதெல்லாம் ஏதேனும் காரணம் கூறி தாமதம் செய்து வந்தாா். பின்னா் கரோனா தொற்று காரணமாக பொது அடைப்பு எனக் கூறி சில நாள்கள் காலம் கடத்தினாா். அதன் பிறகு அவரது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

பல மாதங்கள் கழித்து கடைசியாக தீபக்கை தொடா்பு கொண்டபோது பணத்தை கொடுக்க முடியாது என்றும், வற்புறுத்தினால் கொலை செய்துவிடுவேன் எனவும் குடும்பத்தினருடன் சோ்ந்து மிரட்டியுள்ளாா். எனவே, பணம் வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிய தீபக் உள்பட 4 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீபக், பேபி ஷாலினி, ரேஷ்மா ஆகிய 3 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ராஜாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com