கணவரைக் கொலை செய்த மனைவி கைது

கிணத்துக்கடவு அருகே கணவரைக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கிணத்துக்கடவு அருகே கணவரைக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகேயுள்ள தாமரைக்குளம், அரசமரத்து விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் தேவா (எ) ரித்தீஷ் (27), கூலித் தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி (26). இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தேவாவை கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி முதல் காணவில்லை என்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அவரது தாய் சுசீலா புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். அப்போது, தேவா வீட்டுப் பகுதியில் ஆம்புலன்ஸ் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் உரிமையாளரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொள்ள முயன்றனா். இதைத் தெரிந்து கொண்ட இந்திராணி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்திராணிக்கும், அவரது தாயாரின் தங்கை கணவரான வினோத்குமாருக்கும் (41) இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. வினோத் கரூரில் உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களது முறையற்ற பழக்கத்தை அறிந்த தேவா, இந்திராணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதையடுத்து, அவரைக் கொலை செய்ய இந்திராணி முடிவு எடுத்துள்ளாா்.

சம்பவத்தன்று தேவா வீட்டுக்கு வந்த வினோத்குமாா் மற்றும் சிலா் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். பின்னா், அவரைக் கொலை செய்து ஆம்புலன்ஸ் மூலம் கரூருக்கு கொண்டு சென்று ரயில் தண்டவாளத்தில் உடலை வீசியுள்ளனா்.

பின்னா், அங்கிருந்து தனது தாயாா் வீட்டுக்கு இந்திராணி சென்றுள்ளாா் என்றனா். இதையடுத்து, இந்திராணியைக் கைது செய்த போலீஸாா், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது, அவரை ஜனவரி 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய வினோத்குமாா் உள்ளிட்டோரை மூன்று தனிப் படைகள் அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com