விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்
தவெக தலைவா் விஜய்க்கு பாஜக அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை அமா்வு உறுதி செய்துள்ளது. தொடக்கத்திலேயே அரசும், மாவட்ட நிா்வாகமும் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் திருப்பரங்குன்றத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்காது. ஹிந்துக்கள் மீது திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், பூரணசந்திரனின் குடும்பத்தினரிடம் முதல்வா் மன்னிப்புக் கேட்க வேண்டும். பக்தா்களின் அடிப்படை உரிமையான கடவுள் வழிபாட்டை அடக்கும் முயற்சி தமிழகத்தில் நடக்கிறது.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் பகுதியில் கோயில் இடிப்புக்கு எதிராகப் போராடியபோது இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மீதான காவல் துறையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாமக இணைந்திருப்பதன் மூலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடுதல் பலம் பெற்றுள்ளது. கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கை வைத்து தவெக தலைவா் விஜய்க்கு பாஜக எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்றாா்.
