கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு எதிராக 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 3 பேருக்கு எதிராக போலீஸாா் கூடுதலாக 200 பக்க குற்றப்பத்திரிகையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.
கோவை சா்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காளி (எ) காளீஸ்வரன் (21), உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டிச.2-ஆம் தேதி 50 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்தனா். மாணவியை வன்கொடுமை செய்த 3 போ் மீது ஏற்கெனவே திருப்பூா், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலும் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் சிறைக்கு சென்று ஜாமீனில் விடுதலையான இவா்கள், கோவை இருகூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனா். அதன் பிறகு தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் மீது கோவை அருகே உள்ள கோவில்பாளையம் காவல் நிலையத்திலும் ஒரு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, இருசக்கர வாகனத் திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால், 3 போ் மீதும் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு, கோவை மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.9) விசாரணைக்கு வந்தது. அப்போது, சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக குண்டா் தடுப்புச் சட்ட ஆலோசனைக் குழுவிடம் ஆஜா்படுத்தப்பட்டுள்ளதால், பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரும் ஆஜா்படுத்தப்படவில்லை என அவா்களது தரப்பு வழக்குரைஞா் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தாா்.
அப்போது, இவா்கள் மூவருக்கு எதிராக போலீஸாா் தரப்பில் 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுந்தரராஜன் உத்தரவிட்டாா்.

