

12-ஆம் வகுப்பு மாணவி காரில் கடத்தல் - கூட்டுப் பாலியல் வன்கொடுமை :
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 12-ஆம் வகுப்பு மாணவியொருவர் காரில் கடத்தப்பட்டு இரு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது?
ராஜஸ்தானின் பைகானெர் மாவட்டத்திலுள்ள நபாசர் பகுதியில் கடந்த ஜன. 6-ஆம் தேதி காலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்குச் சென்ற 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவியை வழிமறித்த இரு இளைஞர்கள், தாங்கள் ஓட்டிச் சென்ற காரில் அவரை வலுக்கட்டாயப்படுத்தி ஏற்றிச் சென்றனர். அதன்பின், ஓடும் காரிலேயே அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கார் அருகிலிருக்கும் கிராமப் பகுதிக்குள் நுழைந்த நிலையில், அப்பகுதி மக்கள் சந்தேகத்தின்பேரில் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள் மாணவியை காரிலிருந்து அங்கேயே இறக்கிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
அதன்பின், மாணவியை மீட்ட கிராம மக்கள் அவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து மாணவியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
நபாசர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் கடந்த 11-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிந்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 18 வயது நிறைவடைந்துவிட்டதால் போக்சோ வழக்கு பதியப்படவில்லை என்றும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.