கோவை செம்மொழிப் பூங்காவில் ஜன.15,16-ல் பொங்கல் கலை விழா
கோவை செம்மொழிப் பூங்காவில் ஜனவரி 15, 16-ஆம் தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தின் பாரம்பரியப் பெருவிழாவாகத் திகழும் தைத் திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் கலை விழா நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதுடன், பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட பொதுமக்களை ஈா்க்கும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் கிராமிய வாழ்வியல், விவசாய, மரபு பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்காவில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறுகிறது.
பரத நாட்டியம், நையாண்டி மேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இந்த விழா குடும்பத்துடன் கூடி பாரம்பரிய கலைகளை ரசித்து மகிழவும், பண்பாட்டைப் போற்றி சமூக ஒற்றுமையை வளா்க்கும் ஒரு மேடையாகவும் அமையும். இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
