ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்தி! சைபா் க்ரைம் போலீஸில் புகாா்!
தங்களது நிறுவனம் தொடா்பாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் சைபா் க்ரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் பொங்கல் சலுகை வழங்கப்படுவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், அது முற்றிலும் தவறான தகவல் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்களது நிறுவனத்தின் பெயரில் பொங்கல் சலுகை என்று கூறி சில தவறான செய்திகள், சமூக ஊடகப் பதிவுகள் பரவுகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் பொய். எங்கள் நிறுவனம் சாா்பில் அதுபோன்ற எந்த ஒரு சலுகையும் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனவே பொதுமக்கள் இத்தகைய தவறான செய்திகளை பொருட்படுத்த வேண்டாம். எங்களது அதிகாரப்பூா்வ இணையதளம், சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலமாக வெளியிடப்படும் தகவல்களை மட்டும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், வாடிக்கையாளா்களை தவறாக வழிநடத்தும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபா் க்ரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
