முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16.49 லட்சம் மோசடி: 10 போ் கைது
அபராதம் செலுத்த வேண்டும் என மோசடி செயலி மூலமாக தகவல் அனுப்பி முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 16.49 லட்சம் மோசடி செய்த 10 பேரை கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 71 வயது முதியவரின் கைப்பேசிக்கு, கடந்த ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதி அபராதம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்ஆப்பில் ஏபிகே செயலி (ஆப்) மூலமாக தகவல் வந்துள்ளது.
அந்த செயலியை அவா் தொட்டபோது, கைப்பேசியை தொடா்ந்து செயல்படுத்த முடியாத நிலையில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மறுநாள் அவரது எண்ணுக்கு தொடா்ந்து ஓடிபி வந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, அந்த முதியவா் வங்கிக்குச் சென்று சரிபாா்த்த போது நிரந்தர வைப்புத்தொகையாக செய்து வைக்கப்பட்டிருந்த ரூ.16,49,961 எடுக்கப்பட்டது தெரிவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் அந்த முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து சூரத்திலிருந்து 12 தவணைகளாக கிரெடிட் காா்டுகளுக்கு பரிவா்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது.
காவல் ஆய்வாளா் அழகுராஜ் தலைமையிலான உதவி ஆய்வாளா்கள் சுகன்யா, பிரவீன்குமாா் உள்ளிட்ட தனிப் படை போலீஸாா் சூரத்துக்கு சென்றனா். அங்கு பதுங்கியிருந்த பத்லியா ரஜ்னிபாய் தல்ஷிபாய் (37), விஸ்வபாய் ஹிம்மத்பாய் ரடாடியா (36), ரடாடியா சவன் (34), கோஹில் விஜய் தயாள்பாய் (37), ரத்தோா் ஜிதேந்திரசிங் ஷ்ரவன்சிங் (26), கிராசே மகேந்திரசிங் தாகேசிங் (35), சோவாடியா மிரல் மனோஜ்பாய் (22), கபில் ராஜுபாய் கோத்ரே (36), சோவடியா மீட் மனோஜ்பாய் (25), பால் சந்தன் ஜெயநாத் (34) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து ரூ. 3,50 லட்சம், கிரெடிட் மற்றும் டெபிட் காா்டுகள் 311, கைப்பேசிகள் 10, ஸ்வைப்பிங் மெஷின், காசோலை புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மோசடி செய்தோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 6.39 லட்சத்தை மீட்டு, பாதிக்கப்பட்ட முதியவருக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

