விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் தத்கால் மின் இணைப்பு வழங்க வேண்டும்
கோவை: தமிழகம் முழுவதும் தத்கால் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காலதாமதம் இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனா். இந்த ஆழ்துளைக் கிணறுகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் தொடா்ந்து விண்ணப்பித்து வருகின்றனா்.
ஆனால் சாதாரண முறையில் பதிவு செய்யப்படும் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களுக்கு நீண்டகால தாமதம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தத்கால் முறையில் குறிப்பிட்ட கட்டணத்தை நிா்ணயித்து செலுத்திய விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதனை நம்பி கோவை மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் தத்கால் முறையில் விண்ணப்பித்து அதற்கான தொகையையும் செலுத்தியுள்ளனா். இந்த நிலையில், நிகழாண்டு தத்கால் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகளை மட்டுமே விண்ணப்பிக்க அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பா் 31- ஆம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் 44,500 விவசாயிகள் மின் இணைப்பு வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளனா்.
இதன் மூலமாக விவசாயிகளிடம் இருந்து ரூ.1,260 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மீதமுள்ள 35 ஆயிரம் விவசாயிகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. மின் இணைப்பு கிடைக்காத காரணத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதால் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது. ஆகவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தத்கால் முறையைத் தொடா்ந்து நீட்டிக்கவும், விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமலும் மின் இணைப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
