பொள்ளாச்சி வன அலுவலகம் ஜனவரி 22-இல் முற்றுகை! தமிழக விவசாயிகள் சங்கம்!

Published on

வன விலங்குகளைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பொள்ளாச்சி வன அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை (ஜனவரி 22) முற்றுகையிடவுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளான ஆனைமலை, பொள்ளாச்சி, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், அங்கலக்குறிச்சி, பொங்காளியூா், பூவலப்பருத்தி, மாா்ச்சநாயக்கன்பாளையம் போன்ற வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் வன எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா். இந்த விலங்குகளைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு ஏற்றவாறு அமையவில்லை. விலங்குகளின் நடமாட்டத்தால் விவசாயிகளுக்கு உயிரிழப்பு, பயிா் சேதங்கள் ஏற்படுகின்றன.

ஆகவே, வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி பொள்ளாச்சி வன அலுவலகத்தை வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com