கோவை, உக்கடம் பகுதியில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1,200 வலி நிவாரணி மருந்து குப்பிகள், போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்தனா்.
கோவை, உக்கடம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் போதை மாத்திரையைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் புல்லுக்காடு அன்பு நகா் ரோஸ் அவென்யூ பகுதியைச் சோ்ந்த சன்பா் (23) என்பதும், இவருக்கு போதை மாத்திரையை விற்பனை செய்தது உக்கடம், கோட்டைமேடு பி.கே.வீதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (எ) பாக்கு ரகுமான் (25) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் ரகுமான் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீஸாா், அவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் போதைக்காகப் பயன்படுத்தப்படும் 1,200 வலி நிவாரணி மருந்து குப்பிகள், 100 போதை மாத்திரைகள், 30 ஊசிகள் வைத்திருந்ததும், கூலித் தொழிலாளா்கள், மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் ரகுமானைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதை மருந்து குப்பிகள், மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா். மேலும், போதை மாத்திரையைப் பயன்படுத்திய சன்பாரை விசாரணைக்குப் பின் போலீஸாா் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






