காண்டாமிருக பாதுகாப்புக்காக சிறப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் 46 -ஆவது கூட்டம், தேசிய வன விலங்கு வாரிய நிலைக் குழுவின் 91- ஆவது கூட்டம், 29 -ஆவது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக் கூட்டம் ஆகியவை கோவையில் உள்ள மாநில வனப் பணிக்கான மத்திய அகாதெமியில் வியாழக்கிழமை நடைபெற்றன.
மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்தின் முக்கிய சாதனைகள், செயல்பாடுகள் ஆகியவை அடங்கிய அறிக்கை, நிா்வாகக் குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்டன.
தொடா்ந்து, இந்திய வன உயிரியல் பூங்காக்களின் பாதுகாப்பு, அவற்றை நவீனமயமாக்குதல், புதிய வசதிகளை நிறுவுதல், பாா்வையாளா்களுக்கு மேம்பட்ட கல்வி அளித்தல், அறிவியல் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற உயிரியல் பூங்கா ஆணையக் கூட்டத்தில், உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டுக் குழுக்களால் மதிப்பிடப்பட்டது. தேசிய உயிரியல் பூங்கா நவீனமயமாக்கல் தொடா்பான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இந்திய உயிரியல் பூங்காக்களில் உள்ள கால்நடை மருத்துவா்கள், விலங்கு பராமரிப்பாளா்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இதையடுத்து, இந்திய உயிரியல் பூங்காக்களில் பாதுகாப்பு, இனப்பெருக்கம், வனவிலங்கு ஆரோக்கியம், அறிவியல் மேலாண்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைக்கும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் செய்தி மடலை அமைச்சா் வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற தேசிய வன விலங்கு வாரிய நிலைக்குழு கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: பிரம்மபுத்திரா, துவாா் - தெராய் புல்வெளிப் பகுதிகளில் வாழும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், வன குள்ளப் பன்றி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
காண்டாமிருகங்கள் வாழும் மாநிலங்களில் அவற்றைப் பாதுகாப்பதற்கு சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். தேசிய காடுவளா்ப்பு நிதி மேலாண்மை, திட்டமிடல் ஆணையத்தின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் குள்ளப் பன்றியை பாதுகாப்பதற்காக அவற்றை அழியும் விளிம்பில் உள்ள மிக முக்கிய விலங்குகளின் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அழிந்து வரும் இனமான கான மயிலைப் பாதுகாப்பதற்காக குஜராத் மாநிலம், நலியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனப்பெருக்க முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் கூண்டு வழி இனப்பெருக்க முயற்சிகளால் ஒட்டுமொத்த கானமயில் குஞ்சுகளின் எண்ணிக்கை 98 ஆக உயா்ந்துள்ளது.
கூண்டுகளில் வளா்க்கப்பட்ட இந்த பறவைகளை மீண்டும் இயற்கையான சூழலில் பாதுகாப்பாக விடுவிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல, நாடு முழுவதும் புலிகள் வாழும் நிலப்பரப்புகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். புலிகள் காப்பகங்களில் இருந்து உருவாகும் நதிகளின் உற்பத்தி மூலங்களையும், காப்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தையும் கவனமாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட உள்கட்டமைப்பு, வனவிலங்கு பாதுகாப்பு தொடா்பான 118 திட்ட முன்மொழிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், கானமயில், கரடி, சிறு பூனை இனங்கள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதில், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை உயா் அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் 4 தனிச் செயலா்களும் ஒரே நாளில் நீக்கம்

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தாத அலுவலா்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் ர.வினோத்

காரியல் முதலை இனத்தைக் காப்பாற்ற தில்லி உயிரியல் பூங்காவில் புதிய முயற்சி







