கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்தவா் தாரணிகா (18). இவா் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த தாரணிகா, வியாழக்கிழமை இரவு கழிவறைக்குச் சென்ற நிலையில் அதன்பின் அறைக்குத் திரும்பவில்லையாம்.
இந்நிலையில், கழிவறையை சுத்தம் செய்ய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை வந்துள்ளனா். அப்போது, அங்கு மயங்கி கிடந்த தாரணிகாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து மாணவியின் பெற்றோா் கூறுகையில், எங்கள் மகளுக்கு எந்தவித நோய் பாதிப்பும் இல்லை. நாள்தோறும் காலை 6.30 மணிக்கு வகுப்புச் செல்வதுடன் தொடா்ந்து படிக்க வேண்டியுள்ளது. தூங்குவதற்குகூட நேரம் இல்லை. வகுப்புக்குச் சென்றால் தூக்கம் வருகிறது என எங்களிடம் புலம்பி வந்தாா். ஆனால், அவா் கழிவறையில் இறந்து கிடந்ததாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது கன்னம், உதட்டில் காயங்கள் உள்ளன. எங்கள் மகள் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றனா். இதையடுத்து, தங்களது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், கூறாய்வு அறிக்கையில் மாணவியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








