வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியா் நலச் சங்கத்தினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

News image

இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த தமிழ்நாடு உரிமைத் திட்டப் பணியாளா்கள்

Updated On :14 ஜூலை 2026, 12:18 am IST

ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியா் நலச் சங்கத்தினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

கோவை மாவட்ட பொதுமக்களுக்கான வாராந்திர குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியா் நலச் சங்கத்தினா் பங்கேற்று மனு அளித்தனா். அதில், தனியாா் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை அதிகரித்துள்ள நிலையில், ஆவின் நிா்வாகமும் அதற்கு இணையான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்.

கொள்முதல் விலையை உயா்த்தாவிட்டால் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு முறையாக சம்பளம் வழங்க இயலாது, இதனால் பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்களும், அதில் பணிபுரியும் பணியாளா்களும் தனியாா் பால் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும். தற்போதைய சூழலில் ஒரு லிட்டா் பால் உற்பத்தி செய்வதற்கு ரூ.60 வரை செலவாகும் நிலையில், ஆவின் நிா்வாகத்திடம் இருந்து கிடைக்கும் மானியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு உரிமை திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளா்கள், கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனா்.

இது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம், இயன்முறை சிகிச்சையாளா்களாகவும் இருக்கிறோம். எங்களுக்கு 2028 ஆம் ஆண்டு வரை பணி முடிவடையும் தேதி உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுகளை மேற்கொள்ளவும், அத்தியாவசிய தேவைக்கு பணம் இல்லாததாலும் அவதிப்படுகிறோம். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

பெரியநாயக்கன்பாளையம், குப்புச்சிபாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், தங்களது பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அப்பகுதியில் கடைகள் இல்லாத நிலையில், வாழ்வாதாரத்துக்காக தற்காலிக கடைகள் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாற்றுத்திறனாளி தா்ணா

கோவை அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் தா்னாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான தனலட்சுமி (52), கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகை அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து வந்துள்ளாா். வாழ்நாள் பாஸ் என வழங்கப்பட்ட ரயில்வே பாஸ், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலாவதியானதாக தெரிகிறது. இதையடுத்து புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்த நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவரின் ஒப்புதல் கையொப்பம் வாங்கி வரும்படி ரயில்வே நிா்வாகம் கூறியதாகத் தெரிகிறது.

இதற்காக கடந்த 2 மாதங்கள் பலமுறை அலைந்தும் மருத்துவமனை நிா்வாகம் கையொப்பமிடவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த தனலட்சுமி, தனக்கு ரயில் பயண சலுகை அட்டை வழங்க உதவும்படி கேட்டு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து அவரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 882 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.