விழுப்புரம்: பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
விவசாயிகள் உபரி வருமானத்திற்காக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், பால் மாடு தீவனங்களுக்கான விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 60 கிலோ எடை கொண்ட பருத்தி பிண்ணாக்கு விலை மூட்டை ரூ.2,830-க்கும், 47.5 கிலோ எடை கொண்ட தவிடு விலை மூட்டை ரூ.880-க்கும், 50 கிலோ எடை கொண்ட மக்காச்சோள மாவு விலை மூட்டை ரூ.1,440 என உயர்ந்து கொண்டே போகிறது.
ஆனால், பால் கொள்முதல் விலை மட்டும் பல மாதங்களாக உயர்த்தப்படாமலே உள்ளது. தற்போது ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.32 முதல் ரூ.36 வரை மட்டுமே வழங்குகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.70 -ஆக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதற்கான மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் ஆவின் பால் பண்ணையில் பாலின் தரம், பரிசோதனை செய்யப்படும் விதம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி, அதிநவீன இயந்திரங்கள் மூலம் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் நடைமுறையையும் பார்வையிட்டார். விநியோக வாகனங்களில் பால் ஏற்றி அனுப்பப்படும் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆவின் பார்லர்களில் அனைத்து வகை தயாரிப்புகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களுக்குத் தரமான பால் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேலும், தமிழகத்தில் புதிய ஆவின் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Summary
Will the milk procurement price be increased? - Minister Vijayalakshmi responds...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











