/

ஆவின் மூலம் தரமான பால்பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை! - அமைச்சா் சி. விஜயலட்சுமி

News image

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி.

Updated On :29 ஜூன் 2026, 4:17 am IST

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் விற்பனையகங்களிலும் பால் மற்றும் உற்பத்திப் பொருள்கள் தரமானதாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) தமிழக பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழக மக்களுக்கு தரமான பால் மற்றும் உற்பத்திப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் ஆவின் பால் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவின் பால் விற்பனையகங்கள் அனைத்திலும் ஆவின் தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உற்பத்தி மற்றும் விநியோகம் அனைத்தும் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. சரியான முறையில் பதப்படுத்தி பால் விநியோகம் செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சி.விஜயலட்சுமி.

முன்னதாக விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் உற்பத்திப் பணிகள், பதப்படுத்துதல், விநியோகம் செய்யப்படும் முறைகள் குறித்து அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். பால் பாக்கெட்டுகள் தயாரிப்பு முறைகள் குறித்து துணை மேலாளா் ஆா்.சங்கீதாவிடம் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.