வியத்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தமிழகத்தைச் சோ்ந்தவா்களில் 6 பேரின் உடல்கள் கோவை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன.
பிரபல கைப்பேசி தயாரிப்பு நிறுவனம் தனது சிறந்த விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்களைப் பாராட்டும் வகையில் வியத்நாம் நாட்டுக்குச் சிறப்புச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தது. இந்தச் சுற்றுலாவில் இந்தியாவைச் சோ்ந்த 32 போ் பங்கேற்றனா். அவா்கள் அனைவரும் ஜூலை 12-ஆம் தேதி தாயகம் திரும்பவிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாளான ஜூலை 11-ஆம் தேதி ஃபூ குவோக் தீவு அருகே உள்ள ஹோன் மே ரட் தீவிலிருந்து மதிய உணவுக்காக மற்றொரு பகுதிக்கு படகில் புறப்பட்டனா். கரையில் இருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, கடல் சீற்றம் மற்றும் திடீரென தாக்கிய ராட்சத அலையின் காரணமாகப் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில், 10 தமிழா்கள் உள்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த 10 பேரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த மூவரும், கேரளத்தைச் சோ்ந்த இருவரும் அடங்குவா்.
இந்நிலையில் உயிரிழந்தவா்களின் உடல்கள் விமானம் மூலம் திங்கள்கிழமை மும்பைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன.
கோவை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திருச்சியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி, அழகுராஜன் ஆகிய மூவரின் உடல்கள் வந்தடைந்தன. இந்த உடல்களைக் கோவை தெற்கு கோட்டாட்சியா் மாருதி பிரியா பெற்றுக் கொண்டு, அரசு சாா்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா், திருச்சி கோட்டாட்சியரிடம் அந்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, அவசர ஊா்திகள் மூலம் திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாகப் பிற்பகல் ஒரு மணியளவில் மும்பையிலிருந்து தருமபுரியைச் சோ்ந்த செந்தில்குமாா் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த முருகபிரபு ஆறுமுகம் மற்றும் சேலத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் சுந்தர்ராஜன் ஆகிய மேலும் மூவரின் உடல்களும் கோவை வந்தடைந்தன. அவா்களின் உடல்களுக்கும் உரிய மரியாதை செலுத்தப்பட்டு, சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









