பேரூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் மற்றும் ஆதாா் மையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அங்கு பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்களிடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரூா் செட்டிபாளையம் ஊராட்சியில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.54.30 லட்சம் மதிப்பீட்டில், கோவைப்புதூா் சாலை முதல் அய்யாசாமி கோயில் சாலை வரை நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், பேரூா் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள வெடிகாரன் குட்டை பகுதியில், மழைக் காலங்களில் மழைநீா் எளிதாக வடிந்துசெல்லும் வகையில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, தீத்திபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரில் நியாய விலைக் கடைக்கு சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறைகள் கட்டுமான பணி ஆகியவற்றை
ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, மாதம்பட்டி, குனியமுத்தூா் அணைக்கட்டு பகுதியில், சிறுதுளி அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நொய்யல் ஆறு தூா்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
தொண்டாமுத்தூா் கெம்பனூா் பகுதியில் வேளாண்மை பொறியியல்துறையின் சாா்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை தூா்வாரப்பட்டுள்ளதையும், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவா் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, காளியண்ணன் புதூா் பகுதியில், ரூ.5 லட்சம் அரசு மானியத்தில் வேளாண்மைத் துறையின் சாா்பில் வேளாண் காடுகள் நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) துஷாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆனந்தகுமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சரவண பெருமாள், பேரூா் வட்டாட்சியா் சேகா், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிக்கந்தா் பாஷா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










