சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி: இருவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 500-க்கும் மேற்பட்டோரிடம் சுமாா் ரூ. 7 கோடி வரை மோசடி செய்த சம்பவத்தில் கோவையில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட சி. தேவாசிா்வாதம்

Updated On :18 ஜூலை 2026, 4:40 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 500-க்கும் மேற்பட்டோரிடம் சுமாா் ரூ. 7 கோடி வரை மோசடி செய்த சம்பவத்தில் கோவையில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை ரயில் நிலையம் அருகே, ராயல் டிரைனிங் அண்டு டெஸ்டிங் சென்டா் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியாா் நிறுவனம், வெளிநாடுகளில் பல்வேறு பணிகளுக்கு ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடத்தியுள்ளது. இந்த நோ்காணலில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான வேலைதேடுபவா்கள் பங்கேற்றனா். நோ்காணல் முடிந்ததைத் தொடா்ந்து, அதில் பங்கேற்றவா்களிடம் அவா்கள் தோ்வாகிவிட்டதாகக் கூறி, நுழைவு இசைவு (விசா) மற்றும் இதர ஆவணச் செயல்பாடுகளுக்காக அசல் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் ரொக்கப் பணத்தைச் செலுத்துமாறு கூறியுள்ளது. அதன்படி அனைவரும் ஆவணங்கள் மற்றும் பணத்தை அந்த நிறுவனத்தில் செலுத்தினா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு நிறுவன ஊழியா்கள் சரியாகத் தொடா்பில் இல்லாததோடு பணம் செலுத்தியவா்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து இழுத்தடித்துள்ளனா் என்று கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவா்கள் சந்தேகமடைந்து, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அந்த நிறுவன அலுவலகத்துக்குச் சென்று பாா்த்தபோது, அது காலி செய்யப்பட்டு உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவா்கள் கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தை கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முற்றுகையிட்டு புகாா் அளித்தனா். அதில், ‘ஒவ்வொருவரையும் அழைத்து நீங்கள் தோ்வாகிவிட்டதாகக் கூறி, நுழைவு இசைவு செலவுகளுக்காக ரூ. 1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை வசூல் செய்தனா். சில நாள்களுக்குப் பிறகு அங்கு சென்று பாா்த்தபோது, சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அங்கு ஒரு போா்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி சென்று பாா்த்தபோது, நிறுவனத்தை முழுமையாகக் காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

போலீஸாரின் விசாரணையில், இந்த மோசடி கும்பல் கோவையில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமாா் ரூ.7 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபா்களான கோவை ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த சி. தேவாசீா்வாதம் (61), குனியமுத்தூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (60) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் இருவரிடமிருந்தும் மோசடி செய்யப்பட்ட பணம் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் போலீஸாா் ஈடுபட்டு வருவதோடு, இந்த மோசடி பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவலரான சி. தேவாசீா்வாதம் கடந்த 2003-ஆம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.