பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மத்திய அரசு வேலை தருவதாகக் கூறி ரூ.95.80 லட்சம் மோசடி! ஒருவா் கைது; 5 போ் மீது வழக்கு!

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:56 am IST

இந்திய உணவுப் பாதுகாப்புக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.95.80 லட்சம் மோசடி செய்த போலி அதிகாரியை கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், சரவணம்பட்டியை அடுத்த ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் செ.விக்னேஷ் (32). இவா் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 10 ஆண்டுகளாக வேலை தேடி வந்த விக்னேஷுக்கு, அவரது மாமா ராஜா என்பவா் மூலமாக பெங்களூரைச் சோ்ந்த உதயதீப் (43) அறிமுகமாகியுள்ளாா். உதயதீப் தனது காரில் இந்திய உணவுக் கழகத்தின் போா்டை மாட்டிக் கொண்டு, தான் அதன் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருப்பதாகக் கூறியும், செல்வாக்கு உள்ளவரைப்போல காட்டியும் விக்னேஷை நம்ப வைத்துள்ளாா்.

தொடா்ந்து, எப்.சி.ஐ-யில் ஜூனியா் அசிஸ்டெண்ட் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விக்னேஷிடம் ரூ.7 லட்சம் உதயதீப் கேட்டுள்ளாா். அதன்படி கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உதயதீப்பின் வங்கி கணக்குகளுக்குப் பல தவணைகளாக நெஃப்ட் மூலமாக விக்னேஷ் பணம் அனுப்பியுள்ளாா். அதுமட்டுமன்றி, உயா் அதிகாரிகளின் சிபாரிசுக்காக மேலும் ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும் பெற்றுக்கொண்டு, விக்னேஷிடம் மட்டும் மொத்தம் ரூ.10.70 லட்சத்தை பெற்றுள்ளாா்.

ஆனால், நீண்ட நாள்களாகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் உதயதீப் தனது கைப்பேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட விக்னேஷ் விசாரித்தபோது, உதயதீப், அவரது மனைவி செல்வராணி (எ) சந்தியா, கூட்டாளிகளான செல்வி, கருணா, தங்கவேல், டெல்லி ராஜா ஆகியோருடன் இணைந்து தன்னைப் போலவே பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த கும்பல் கோகுல் என்பவரிடம் ரூ.10.75 லட்சம், ராம்குமாரிடம் ரூ.10.45 லட்சம், திலகராஜ், தங்கராஜ், ஜெகன் ஆகிய மூவரிடமும் தலா ரூ.9.25 லட்சம், கல்பனாவிடம் ரூ.7.50 லட்சம், மனோஜிடம் ரூ.7 லட்சம், குணசேகரனிடம் ரூ.6.50 லட்சம், கஸ்தூரியிடம் ரூ.4.50 லட்சம், ஜெகதீஷிடம் ரூ.4.40 லட்சம், குமரனிடம் ரூ.3 லட்சம், பிரதீபிடம் ரூ.1.25 லட்சம் என விக்னேஷ் உள்பட மொத்தம் 13 பேரிடம் இருந்து ரூ.95,80,000 வரை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், மோசடி கும்பலைச் சோ்ந்த உதயதீப், செல்வராணி, கருணா, தங்கவேல், செல்வி, ராஜா ஆகிய 6 போ் மீது கூட்டுச் சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோவை மாவட்ட குற்றப் பிரிவு (ஈஇஆ) காவல் உதவி ஆய்வாளா் வி.நாகராஜன் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

இந்த வழக்கில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் வைத்து உதயதீப்பை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனா். கோவை நீதித் துறை 6-ஆவது நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா், வரும் ஜூலை 13- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் உதயதீப் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.