தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, கோவையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) மற்றும் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்யவும், தில்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவா்கள் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தில்லியில் மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். அப்போது, மாணவா்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினா் வலியுறுத்தியும் தொடா்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனா். இதில் 4 பெண்கள் உள்பட மொத்தம் 40 பேரை போலீஸாா் கைது செய்து, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், அனைவரும் மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனா்.
சட்டக்கல்லூரியில் ஆா்ப்பாட்டம்:
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை அரசு சட்டக் கல்லூரி முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினரும், சட்டக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவியுமான ஷிா்பத் நிஷா தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவா்கள் கௌரிசங்கா், அபினவ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஜீவா இல்லத்தில் காத்திருப்பு போராட்டம்:
கோவை பூமாா்க்கெட் அருகேயுள்ள ஜீவா இல்லத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா் புதன்கிழமை மாலை முதல் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா். நீட் தோ்வால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படங்கள் முன் மெழுகுவா்த்தி ஏந்தி நீட் தோ்வை ரத்து செய்யவும், மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவி விலகவும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராடத்துக்கு நீட் எதிா்ப்பாளா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இதுவரை நூற்றுக்கணக்கானோா் இதில் பங்கேற்றுள்ளனா்.
‘யங் டெமாக்ரட்ஸ்’ ஆா்ப்பாட்டம்:
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் இளைஞா் அமைப்பான ‘யங் டெமாக்ரட்ஸ்’ சாா்பில் அதன் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் அனீஃப் கான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பைச் சோ்ந்த அஸ்மிரா பேகம், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










