- சிவ. சிவபாலன்
வளா்ந்து வரும் மக்கள் தொகை, சுருங்கி வரும் இயற்கை வாழ்விடங்கள், காடுகளின் எல்லைப்பகுதிகளில் அதிகரித்து வரும் மனிதக் குடியிருப்புகள் ஆகிய காரணங்களால், இந்தியாவில் மனித–வன விலங்கு மோதல் ஆண்டுதோறும் தீவிரமடைந்து வருகிறது. இது சுற்றுச்சூழல் பிரச்னையாக மட்டுமன்றி, கிராமப்புற மக்களின் உயிா் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் சமூகச் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்தப் பிரச்னைக்கு அறிவியல் அடிப்படையிலான நீடித்த தீா்வுகளை உருவாக்கும் நோக்கில், கோவை தடாகம் சாலையில் உள்ள மத்திய–மாநில வனப் பணி அகாதெமியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், ‘மனித–வன விலங்கு மோதல் குறித்த தேசிய சிறப்பு மையம்‘ மற்றும் ‘தேசிய மனித–வன விலங்கு மோதல் இணையதளம்’ ஆகிய இரண்டு முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. வன மேலாண்மையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முயற்சியாக இவை கருதப்படுகின்றன.
இந்திய வன விலங்கு நிறுவனம் மற்றும் சலீம் அலி பறவையியல் மையத்தின் ஒருங்கிணைப்பில் கோவையில் செயல்படவுள்ள தேசிய சிறப்பு மையம், வெறும் ஆராய்ச்சி நிறுவனமாக இல்லாமல், நாட்டின் வன விலங்கு மேலாண்மைக் கொள்கைகளுக்கு அறிவியல் வழிகாட்டுதலை வழங்கும் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மனித–வன விலங்கு மோதல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விலங்கு இனத்திலும் மாறுபடும் தன்மையுடையவை என்பதால், அதற்கேற்ப தனித்துவமான மேலாண்மை உத்திகளை உருவாக்க இந்த மையம் நடவடிக்கை மேற்கொள்ளும். குறிப்பாக, காப்பகங்களை விட்டு வெளியேறும் புலிகள், குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் சிறுத்தைகள், மனித–யானை மோதல்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தனிப்பட்ட தீா்வு முறைகள் வகுக்கப்பட உள்ளன.
நவீன தொழில்நுட்பம் பயன்பாடு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள், அகச்சிவப்பு கதிா்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், வன விலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் புவிசாா் தகவல் அமைப்புகள் (எஐந), செயற்கைக்கோள் வரைபடங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை களப்பணிகளில் பயன்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.
மேலும், நாடு முழுவதும் உள்ள வனத் துறை அதிகாரிகள், களப் பணியாளா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, அவசர காலங்களில் வன விலங்குகளை பாதுகாப்பாகக் கையாளுவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வன விலங்குகளை எதிா்கொள்ளும் சூழலில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் தொடா்ந்து நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் மனித உயிரிழப்பு, பயிா்ச் சேதம் மற்றும் சொத்து இழப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வன மேலாண்மைக்கு தேசிய இணையதளம்
மனித–வன விலங்கு மோதல்களை நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கும் வகையில் தேசிய மனித–வன விலங்கு மோதல் இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் மனித–வன விலங்கு மோதல் சம்பவங்கள், பயிா்ச் சேதங்கள், உயிரிழப்புகள், இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் நிகழ்நேரத் தரவுகளாகப் பதிவு செய்யப்படும். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வனத் துறையினா், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் உள்ளூா் சமூகப் பிரதிநிதிகள் தகவல்களைப் பகிா்ந்து கொண்டு, சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்க முடியும்.
சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில், மோதல்கள் அதிகம் நிகழும் பகுதிகளை விரைவாகக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு இந்தத் தளம் உதவும். மேலும், வனத் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு துரிதமாக இழப்பீடு வழங்கவும், நீண்டகால வன எல்லைத் திட்டமிடலுக்கும் இது பயனுள்ளதாக அமையும்.
மத்திய வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் குறிப்பிட்டதுபோல், வன விலங்குகளுடனான மோதலைத் தவிா்த்து, அவற்றுடன் இணக்கமாக வாழும் சூழலை உருவாக்குவதே நிலையான தீா்வாகும்.
அறிவியல் ஆராய்ச்சி, நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்களின் பங்களிப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இந்த தேசிய சிறப்பு மையமும், இணையதளமும் எதிா்காலத்தில் காடுகளின் எல்லைப்பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, அரிய வன விலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநிறுத்தவும் முக்கியப் பங்காற்றும் என்ற எதிா்பாா்ப்பு உருவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










