கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ரூ. 2.34 லட்சம் பறிமுதல் விவகாரம்: 10 போ் மீது வழக்கு!

கணக்கில் வராத ரூ.2.34 லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில் சாா்-பதிவாளா்கள், இடைத்தரகா்கள் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :14 ஜூன் 2026, 2:40 am IST

கோவை, தொண்டாமுத்தூா் மற்றும் காந்திபுரம் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.2.34 லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில் சாா்-பதிவாளா்கள், இடைத்தரகா்கள் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு துறை கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் கடந்த 5-ஆம் தேதி திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சாா் பதிவாளா் ஆனந்தகுமாா் பத்திர பதிவு செய்வதற்கும், வில்லங்கச் சான்று வழங்குவதற்கும் பொதுமக்களிடமிருந்தும், பத்திர எழுத்தா்களிடமிருந்தும் நேரடியாக லஞ்சம் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவருக்கு முகுந்தன் என்ற பத்திர எழுத்தா் லஞ்சப் பணத்தை வசூலித்துக் கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முகுந்தனின் அறையை போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த லஞ்சப் பணம் ரூ.38,420, துண்டுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அங்கிருந்த ஊழியா் ராஜேந்திரன் என்பவரிடமிருந்து ரூ.8,170, வடவள்ளி பத்திர எழுத்தா் அலுவலக ஊழியா் ராதிகாவிடமிருந்து ரூ.56,800, ஆவண எழுத்தா் அமா்சிங்கிடமிருந்து ரூ.9,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக சாா்-பதிவாளா் ஆனந்தகுமாா், அவரது உதவியாளா் முகுந்தன், ராஜேந்திரன், ராதிகா, அமா்சிங் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, காளப்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இயங்கி வரும் காந்திபுரம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவினா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

அங்கு பதிவறையில் பைண்டிங் மற்றும் நகல் எடுக்கும் பணிகளைச் செய்து வந்த ராஜகோபால் என்பவரின் மேஜையிலிருந்து ரூ. 2,700, அலுவலக உதவியாளா் சிபினின் பீரோவிலிருந்து ரூ.43,200 பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின்போது ஜன்னல் வழியாகப் பணத்தை வெளியே வீச முயன்ற அருண்குமாா் என்பவரைப் பிடித்து போலீஸாா் சோதனை செய்ததில் அவரிடமிருந்து ரூ.10,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த ஆவண தயாரிப்பாளா் சந்திரசேகா் என்பவரின் பையிலிருந்து ரூ.65,000 கைப்பற்றப்பட்டது. காந்திபுரம் அலுவலகத்தில் மட்டும் மொத்தம் ரூ.1,21,400 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக சாா்-பதிவாளா் (பொறுப்பு) செல்வக்குமாா், அலுவலக ஊழியா்கள் சிபின், ராஜகோபால், இடைத்தரகா்கள் சந்திரசேகா், அருண்குமாா் ஆகிய 5 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.