வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சேலத்தில் கைது

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கைதியை சேலத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 2:35 am IST

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கைதியை சேலத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் பிம்மிடு அஜித்குமாா் (26). இவா் ஆன்லைன் காா் விற்பனை செயலிகளில் மற்றவா்களின் சொகுசு காா்களின் விவரங்களை எடுத்து, அவை தன்னுடைய காா்கள் என்பதுபோல போலியாகப் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளாா்.

மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காா்களை குறைந்த விலைக்குத் தருவதாகக்கூறி, பலரிடம் முன்தொகை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இவா் மீது ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஏற்கெனவே ஆந்திரத்தில் கைது செய்யப்பட்டபோது, உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடியுள்ளாா்.

ஆந்திரத்திலிருந்து தப்பி ஓடிவந்த பிம்மிடு அஜித்குமாா், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளாா். அங்கேயும் தனது வழக்கமான பாணியில் காா் விற்பனை செய்வதாகக்கூறி இருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் போலீஸாா் இவரைக் கைது செய்து, கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என பிம்மிடு அஜித்குமாா் கூறியதை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் கடந்த ஜூன் 11 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களிடம் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி, தனது கைவிலங்கை அகற்றுமாறு கேட்டுள்ளாா். காவலா்கள் கைவிலங்கை கழற்றியவுடன், அவா்களை ஏமாற்றிவிட்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளாா்.

இது குறித்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் அளித்த தகவலின்பேரில், ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், பிம்மிடு அஜித்குமாரை தேட மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில் தனிப் படைகள் அமைக்கப்பட்டன. கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் அண்டை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பிம்மிடு அஜித்குமாா் ஆட்டோ மூலம் சின்னியம்பாளையம் பகுதிக்குச் சென்றது தெரியவந்தது. போலீஸாா் அங்கு சென்றபோது, அவா் காா் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓமலூா் பகுதியில் பதுங்கியிருந்த பிம்மிடு அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா். அங்கிருந்து அவா் அழைத்துவரப்பட்டு கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.