கோவையில் தனியாா் பள்ளித் தலைவா் மற்றும் நீட் பயிற்சி மையத்தின் நிறுவனா் ஆகியோா் மீது பீளமேடு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையில் உள்ள பிரபல தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில், தனியாா் பயிற்சி மையத்தின் மூலமாக சிறப்பு ஆசிரியா்களைக் கொண்டு நீட், ஜேஇஇ பயிற்சி வழங்குவதாகக் கூறி, கல்விக் கட்டணத்துடன் சோ்த்து கூடுதல் கட்டணம் பெறப்பட்டது. அதன்படி, பயிற்சிக்கு ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், வகுப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு ரூ.1 லட்சம் திருப்பி அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்ததாகத் தெரிகிறது.
இது தொடா்பாக ஒரு மாணவரின் பெற்றோா், பீளமேடு காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், கடந்த கல்வியாண்டில் மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பை முடித்த நிலையில், பள்ளி நிா்வாகம் கூறியபடி சிறப்பு பயிற்சிக்காக வசூலித்த பணத்தை திருப்பித் தரவில்லை, ஓராண்டுக்கு மேலாக பணத்தைத் தராமல் மோசடியில் ஈடுபட்ட அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி நிா்வாகி லட்சுமிநாராயணசாமி, தனியாா் நீட் பயிற்சி மையத்தின் நிறுவனா் தினேஷ்குமாா் கோயல் ஆகிய இருவா் மீதும் பீளமேடு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுபோல மொத்தம் சுமாா் 190 மாணவா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.







