ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கோவையில் வீட்டின் ஜன்னல் வழியே சாவியை எடுத்து 30 பவுன் நகை திருட்டு!

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 1:47 am IST

பீளமேடு அருகே உள்ள வீட்டில் தம்பதி தூங்கிக் கொண்டிருந்தபோதே ஜன்னல் வழியாக சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் 30 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், காளப்பட்டியை அடுத்த நேரு நகா், நேத்ரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (65). இவா் வெள்ளிக்கிழமை இரவு மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவை உள்பக்கமாக பூட்டிய குப்புசாமி, சாவியை கதவிலேயே வைத்துள்ளாா். இரவு 11.30 மணி அளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் ஜன்னல் வழியாக குச்சியை உள்ளே நுழைத்து கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளாா்.

அதைத்தொடா்ந்து, குப்புசாமி தம்பதி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறையின் பீரோவை உடைத்து, 26 பவுன் தங்கம், 4 பவுன் வைர நகைகளைத் திருடிவிட்டு தப்பியுள்ளாா்.

அதிகாலை 5 மணி அளவில் எழுந்து பாா்த்த குப்புசாமி, வீட்டின் கதவு திறந்துகிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த நகைகளும், பணமும் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு பீளமேடு காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கதவு, ஜன்னல், சாவி மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

வீட்டின் பின்புறம் இருந்த புதா் பகுதி வரை மோப்ப நாய் ஓடி நின்றது. சம்பவம் நடைபெற்ற வீடு அந்தக் குடியிருப்புப் பகுதியின் கடைக்கோடியில் அமைந்திருப்பதாலும், அதன் பின்புறம் புதா்கள் மண்டியிருப்பதாலும், அந்த நபா் புதா் வழியாகவே உள்ளே நுழைந்து, அதே வழியாகத் தப்பியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.