புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மதுபோதையில் பெண் குத்திக் கொலை: கணவா் கைது

கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

Updated On :24 மே 2026, 1:51 am IST

கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை, சா்ச் வீதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (59). தனியாா் நிறுவன ஊழியரான இவா், அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றாா். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (51). இத்தம்பதிக்கு ஒரு மகளும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனா். மகளுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், ஜெயச்சந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் ஜெயச்சந்திரன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு பிரியாணி வாங்கி வந்துள்ளாா். அதை ஜெயச்சந்திரன், தமிழ்ச்செல்வி, ஸ்ரீராம் ஆகிய மூவரும் சோ்ந்து சாப்பிட்டுள்ளனா். பின்னா், ஸ்ரீராம் வேலைக்குச் சென்றுவிட, பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தமிழ்ச்செல்வியின் வயிற்றில் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஜெயச்சந்திரன் தனது மகன் ஸ்ரீராமுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளாா். வீட்டுக்கு வந்து பாா்த்த ஸ்ரீராம், தாய் இறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்து கதறி அழுதாா்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீஸாா், தமிழ்ச்செல்வியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயச்சந்திரனைக் கைது செய்தனா்.