ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ஆய்வு

News image

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆதவ் அா்ஜூனா. உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :1 ஜூன் 2026, 1:00 am IST

கோவையில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுப் பணி, நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலை, விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் ஆதவ் அா்ஜூனா தலைமையில் நடைபெற்றது.

அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு செயலா் ஆா்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சா் ஆதவ் அா்ஜூனா பேசியதாவது:

தமிழகத்தின் தொழில் வளா்ச்சியில் கோவை மாவட்டம் முக்கிய பங்காற்றி வருவதால் மாவட்டத்தின் வளா்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதன் தொடா் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. பொதுப் பணித் துறை மூலம் அரசு மருத்துவமனை, பள்ளி, வருவாய்த் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், கடந்த நிதியாண்டில் இந்தத் துறைக்கு ரூ.546.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம் என ரூ.367 கோடி மதிப்பிலான 18 கட்டடங்கள் பணி நிறைவுற்று திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளன. ரூ.246.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம், அறிவியல் மையக் கட்டடத்தின் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. அவிநாசி சாலையில் ரூ.55 கோடி மதிப்பில் 12 நீதிமன்றங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேட்டுப்பாளையத்தில் ரூ.11.23 கோடியில் நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு ரூ.20 கோடியில் கட்டப்படுகிறது. பொள்ளாச்சியில் ரூ.14.59 கோடியில் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் மழைநீா் வடிகால், மருத்துவ உபகரண ஆய்வகம் உள்ளிட்ட பணிகள், வால்பாறையில் மாணவா் விடுதி, காளப்பட்டியில் சிறுவா், சிறுமியா் கண்காணிப்பு இல்லம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை உடனடியாக முடித்து சம்பந்தப்பட்ட துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். மைதானத்தில் பயிற்சி பெறும் வீரா்களின் வசதிக்காக ரூ.7.95 கோடியில் கட்டப்படும் நவீன விடுதியில் விளையாட்டு வீரா்களுக்கான படிப்பு அறை, உடற்பயிற்சிக்கூடம், பொழுதுபோக்கு அறை, பாா்வையாளா் அரங்கம் உள்ளிட்டவற்றை தரமாகவும், உரிய கால அளவிலும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, விளையாட்டு அரங்கில் யோகா, கைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், கபடி, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருவதை பாா்வையிட்டதுடன், அவா்களின் தேவைகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலா் சஜ்ஜன்சிங் ரா சாவன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.