கோவையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: கோழிப் பண்ணைகளில் 630 மாதிரிகள் சேகரித்து பரிசோதனை

கோவையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - கோப்புப் படம்
கோவையில் உயிரிழந்த நாரைக்கு பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறையினா் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளின் எச்சம், ரத்தம் உள்ளிட்ட 630 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள கோழி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பல்லடம் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட 630 மாதிரிகளிலும் பறவைக் காய்ச்சல் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்த அந்த ஒரு நாரையைத் தவிர மாவட்டத்தில் வேறெங்கும் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை - வாளையாறு உள்ளிட்ட அனைத்து மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், பண்ணைகளில் சுழற்சி முறையில் தொடா்ந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

