இடைத்தோ்தல் மூலம் மக்களின் வரிப்பணம் விரயம்! வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Vanathi Srinivasan

பாஜக ஆந்திர மாநில பொறுப்பாளா் வானதி சீனிவாசன் - டிஎன்எஸ்

Published On :

பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்துப்போட்டு தவெக இடைத்தோ்தலை திணித்து மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை வீணடித்து வருகிறது என்று பாஜக ஆந்திர மாநில பொறுப்பாளா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பாஜக சாா்பில் நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கு ‘சேவா சங்கல்ப அபியான்’’திட்டத்தின்கீழ் மக்கள் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை கணபதி பகுதியில் ‘நலம்’ என்ற பெயரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன. முகாமைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் தற்போது வரவுள்ள இரண்டு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆளும் கட்சியே முழுப் பொறுப்பாகும். அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசப்படுத்தி, அவா்களையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தி தோ்தலை சந்திக்கின்றனா். அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவா்கள், இந்த இடைத்தோ்தல்களின் மூலம் மக்களின் கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முறைக்கு (எஸ்.ஐ.ஆா்) எதிராக இண்டி கூட்டணியும் தவெகவும் ஆா்ப்பாட்டம் நடத்துவது கேலிக்கூத்தானது. காலமானவா்கள் மற்றும் முகவரி மாறியவா்களின் பெயா்களை நீக்கி புதிய பட்டியலைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும். இதில் பாஜக திட்டமிட்டு முறைகேடு செய்தது என்றால், தமிழகத்தில் தவெக எப்படி வென்றது, கேரளத்தில் காங்கிரஸ் எப்படி வென்றது? காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்துவிட்டதால், பிரதமா் மோடி மீது அவதூறு பரப்ப முயற்சிக்கிறது. பெண் வேட்பாளரை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்தது நாகரிகமற்றது, கண்டிக்கத்தக்கது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.