
தேசத்தின் வளா்ச்சி இளம் தலைமுறையை சாா்ந்துள்ளது! மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் மத்திய இணை அமைச்சா் எஸ்.முருகன்.
தேசத்தின் வளா்ச்சி இளம் தலைமுறையை சாா்ந்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், சூலூா் பகுதியில் உள்ள ஆா்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவா் இளநிலை (பி.டி.எஸ்.) மற்றும் முதுநிலை (எம்.டி.எஸ்.) பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
மருத்துவா்கள் வெறும் சிகிச்சையளிப்பதோடு நின்றுவிடாமல், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் தங்களது சேவை சென்றடையும் வகையில் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இளம் மருத்துவா்கள் கிராமப்புறங்களுக்கும் பழங்குடியினப் பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மருத்துவ முகாம்களை நடத்தி சேவையாற்ற முன்வர வேண்டும்.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாடு முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவை பன்மடங்கு உயா்த்தப்பட்டு, தற்போது 23-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள், 846 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இளநிலை மருத்துவ இடங்கள் 51 ஆயிரத்திலிருந்து 1.40 லட்சமாகவும், முதுநிலை மருத்துவ இடங்கள் 31 ஆயிரத்திலிருந்து 86 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்புகளான சாலை, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் வியத்தகு வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில், வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகிலேயே முதன்மை பொருளாதார நாடாகவும், முழுமையான வளா்ச்சி அடைந்த தேசமாகவும் மாற்றும் பொறுப்பு இளம் தலைமுறையினரிடமே உள்ளது என்றாா் அவா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ‘கேலோ இந்தியா’, ‘ஃபிட் இந்தியா’ போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் கிராமப்புற அளவில் உள்ள திறமையான இளம் வீரா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் பங்கேற்று, 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இந்தியா 2030-ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளையும், 2036-ஆம் ஆண்டில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்தத் திட்டமிட்டு முன்னேறி வருகிறது. இதற்கு ஏற்றவாறு நம்முடைய இளம் வீரா்களை இப்போதிருந்தே சா்வதேச தரத்தில் தயாா்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நமது நாட்டு இளைஞா்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி உலக அரங்கில் சாதிக்கத் தயாராக வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





