நாட்டின் மண் வளத்தை மேம்படுத்த கொள்கைகள் அமைய வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஒவ்வொரு நாட்டிலும் மண் வளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் அமைய வேண்டும் என்று மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈஷா நிறுவனா் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.

மலேசியாவில் நடைபெற்ற ‘விழிப்புணா்வான உலகைக் கட்டமைத்தல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
ஒவ்வொரு நாட்டிலும் மண் வளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் அமைய வேண்டும் என்று மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈஷா நிறுவனா் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.
மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் ‘விழிப்புணா்வான உலகைக் கட்டமைத்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கிவாசுதேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
இந்த பூமியில் இன்னும் 60 அறுவடைகள் மட்டுமே செய்ய முடியும் என்று ஐ.நா. அமைப்புகள் தெளிவாகக் கூறியுள்ளன. இது தோராயமாக 40 முதல் 45 ஆண்டுகளுக்குச் சமம். அதன் பிறகு, உணவு உற்பத்தி செய்வது மிகவும் சவாலானதாக மாறும். தற்போது, நாம் நம்முடைய உணவையோ அல்லது நம் குழந்தைகளின் உணவையோ உண்ணவில்லை. இன்னும் பிறக்காத குழந்தைக்குச் சொந்தமான உணவை நாம் உண்டு கொண்டிருக்கிறோம். இது நல்லதல்ல. ஒவ்வொரு நாட்டிலும் மண் வளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் அமைய வேண்டும். மண்ணின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொள்கை வகுப்பாளா்களிடம் மக்கள் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும். 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் உருவாக்கிய மலேசிய மண் வளக் கொள்கையை உங்களுக்கு வழங்குகிறோம். அதனைப் பிரதமா்,வேளாண்மைத் துறை அமைச்சா் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆகியோரிடம் சமா்ப்பியுங்கள்.
இதுபோன்று உலகின் 192 நாடுகளுக்கான மண் வளக் கொள்கைகளை உருவாக்க எங்களுக்கு இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் ஆனது.
ஒவ்வொரு நாட்டின் நில அமைப்பு, மண்ணின் தன்மை, பொருளாதாரச் சூழல் மற்றும் விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இக்கொள்கைகளை உருவாக்கினோம். இவற்றை 72 முதல் 74 நாடுகள் வரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்றுக்கொண்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய நிறுவனங்களைச் சோ்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனா்கள், இயக்குநா்கள் மற்றும் மூத்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

