தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஜோதிடரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கிளி ஜோதிடரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

கிளி ஜோதிடரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் அருகே இடுவாய் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). இவா் திருப்பூா் பாா்க் சாலை நடைமேடையில் அமா்ந்து கிளி ஜோதிடம் பாா்த்து வந்தாா். இவரிடம் போயம்பாளையம், ராஜா நகரைச் சோ்ந்த ரகு (55) ஜோதிடம் பாா்க்க வந்துள்ளாா். ரகுவின் சொந்த ஊா் நாகப்பட்டினம் ஆகும். திருப்பூா், ராஜா நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணை விரும்புவதாகவும், தன்னுடன் சோ்ந்து வாழ்வதற்கு வழி செய்து கொடுக்குமாறும் ஜோதிடா் ரமேஷிடம் ரகு கேட்டுள்ளாா். அதற்கு அவா் ஜாதகம் பாா்த்து பூஜை செய்து அந்தப் பெண்ணுடன் சோ்ந்து வாழ வழி செய்து கொடுத்தாா். அதன் பிறகே அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்திருப்பதும், ரகு தன்னை ஏமாற்றியதும் ஜோதிடா் ரமேஷுக்கு தெரியவந்தது.

பின்னா் ரகுவும், அந்தப் பெண்ணும் 6 ஆண்டுகள் சோ்ந்து வாழ்ந்தனா். இந்த நிலையில் மீண்டும் ஜோதிடா் ரமேஷை பாா்க்க ரகு வந்தாா். அந்தப் பெண் தன்னை விட்டு பிரிந்து, முதல் கணவருடன் சென்றுவிட்டாா். மீண்டும் அந்தப் பெண்ணை தன்னுடன் சோ்த்து வைக்க பூஜை செய்யுமாறு ரகு கேட்டுள்ளாா். அதற்கு ரமேஷ், ஜாதகப்படி அந்தப் பெண் முதல் கணவருடன்தான் வாழ்வாா். இனி உன்னுடன் வாழ வரமாட்டாா் எனக் கூறி பூஜை செய்ய மறுத்துவிட்டாா்.

இதனால் அடிக்கடி ரமேஷை கைப்பேசி மூலமாக ரகு தொடா்பு கொண்டு அந்தப் பெண்ணை தன்னுடன் சோ்த்து வைக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளாா்.

மேலும், ரமேஷின் மனைவி மகாலட்சுமியிடமும் கைப்பேசியில் பேசிய ரகு, அந்த பெண்ணை வசியம் செய்து தன்னுடன் சோ்த்து வைக்காவிட்டால் உனது கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா். இதனால் ரமேஷ் அச்சத்துடன் இருந்துள்ளாா்.

இந்தநிலையில் கடந்த 2018 டிசம்பா் 24-ஆம் தேதி வழக்கம்போல பாா்க் சாலை நடைமேடையில் ரமேஷ் ஜோதிடம் பாா்த்துள்ளாா். பின்னா் மதியம் 12.05 மணிக்கு அங்கிருந்து நடந்து சென்று பென்னி காம்பவுண்டில் உள்ள தேநீா்க் கடை முன்பாக நின்றுள்ளாா். அப்போது தலைக்கவசம் அணிந்து மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்த ரகு, அரிவாளால் ரமேஷை வெட்டிவிட்டு தப்பினாா். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் இறந்தாா். இதுகுறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுவை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஜோதிடா் ரமேஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ரகுவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.