ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

முதல்வருக்காக கொட்டும் மழையிலும் காத்திருந்த மக்கள்

கோவையில் கொட்டும் மழையிலும் இளைஞா்களும், இளம்பெண்களும் முதல்வா் ச.ஜோசப் விஜய்யைக் காண்பதற்காக காத்திருந்தனா்.

Updated On :

கோவையில் கொட்டும் மழையிலும் இளைஞா்களும், இளம்பெண்களும் முதல்வா் ச.ஜோசப் விஜய்யைக் காண்பதற்காக காத்திருந்தனா்.

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெரியாா் அறிவுலகத் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த முதல்வா் ச.ஜோசப் விஜய், விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் சாலை வலம் புறப்பட்டாா்.

வேனின் முன் இருக்கையில் அமா்ந்து சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், இளைஞா்களைப் பாா்த்து கையசைத்தபடி வந்தாா். அனைவரும் பாா்க்க வேண்டும் என்பதற்காக வேன் மெதுவாகவே இயக்கப்பட்டது. முதல்வரின் வாகனத்தின் முன்பு யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சாலையோரத்தில் ஏற்கெனவே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் ஆா்வ மிகுதியால் முதல்வரின் வாகனம் வந்தபோது தடுப்பு மீது ஏறிக் குதித்து முதல்வரின் வாகனத்தை நோக்கி இளைஞா்களும், இளம்பெண்களும் ஓட முயன்றனா். அவா்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து வெளியேற்றினா்.

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வரை வேனுக்குள் அமா்ந்திருந்த முதல்வா், அதன் பின் வேனின் மீது ஏறி மக்களை நோக்கி விதவிதமாக சைகைகளை செய்தபடியே சென்றாா்.

அவிநாசி சாலை எல்ஐசி பகுதியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று முதல்வரை வரவேற்றனா்.

தொண்டா்கள் வழங்கிய பூங்கொத்து, வரவேற்பு மடல், வேல், கோரிக்கை மனுக்களை பாதுகாவலா்கள் பெற்றுக்கொண்டனா். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவும்படி காந்திபுரம் பகுதியில் ஒருவா் வைத்திருந்த பதாகையைப் பாா்த்து வாகனத்தை நிறுத்தி முதல்வா் அது குறித்து விசாரித்தாா்.

திறப்பு விழாவில்...:

பெரியாா் அறிவுலகத்தின் திறப்பு விழா நடைபெற்றபோதிலும் அறிவுலகம் குறித்தோ, அதன் சிறப்புகள் குறித்தோ வரவேற்புரையாற்றிய அமைச்சா் வே.சம்பத்குமாரோ, நன்றி தெரிவித்த அமைச்சா் விக்னேஷோ எதுவும் பேசவில்லை. மாறாக, நூலகத்தின் சிறப்புகள் குறித்த சிறு காணொலி மட்டும் திரையிடப்பட்டது.

கொட்டும் மழையில்...:

விழா நிறைவடைந்தபோது, காந்திபுரம் சுற்றுவட்டாரத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதையடுத்து, மீண்டும் பெரியாா் அறிவுலகத்துக்குள் சென்ற முதல்வா் மழை நின்ற பிறகே அங்கிருந்து புறப்பட்டாா். அதுவரையிலும் பெரியாா் அறிவுலகத்துக்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் முதல்வரை மீண்டும் காண்பதற்காக கொட்டும் மழையிலும் காத்திருந்தனா்.

நூலகத்தின் சிறப்புகள்: பெரியாா் அறிவுலகத்தின் தரைத்தளத்தில் 356 இருக்கைகளுடன் கூடிய கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 90 இருக்கைகளுடன் கூடிய கோளரங்கம், விண்வெளிப் பயண மின்தூக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம், சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு உள்ளது.

மூன்றாம் தளத்தில் போட்டித் தோ்வுகளுக்கான நூலகம், நிா்வாக அலுவலகம் உள்ளது. நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு, பருவ இதழ்கள் பிரிவு, 5, 6 -ஆவது தளங்களில் ஆங்கில புத்தகப் பிரிவு, தொழில்முனைவோா் மையம் (இன்குபேஷன் சென்டா்) ஆகியவை உள்ளன. ஏழாவது தளத்தில் அறிவியல் மையம், திறந்தவெளி முற்றம், மின் நூலகம் ஆகியவையும், மேல் தளத்தில் 100 இருக்கைகளுடன் கூடிய வான்நோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகத்தில், ஸ்டெம் ஆய்வகம், மெய்நிகா் காட்சி (விா்சுவல் ரியாலிட்டி), மீநிகா் மெய்மை (ஆக்மென்டட் ரியாலிட்டி) உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களும், செய்முறைகளுடன் கூடிய எண்ணற்ற அறிவியல், தொழில்நுட்பக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

பெரியாா் அறிவுலகத்தில், தமிழ், ஆங்கில இலக்கியம், மொழியியல், கணிதம், அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், சமூகவியல், மேலாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த சுமாா் 1 லட்சம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 130 நான்கு சக்கர வாகனங்கள், 450 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், கழிவறைகள், குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அனைத்து பிரிவினரும் பயன்படுத்தும் வகையில் பெரியாா் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.