மாநகராட்சிப் பகுதியில் வீதிமீறல்: 214 பேருக்கு ரூ.5.78 லட்சம் அபராதம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் வீதிமீறலில் ஈடுபட்டதாக 214 பேருக்கு ரூ.5.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் - சித்திரிப்பு
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் வீதிமீறலில் ஈடுபட்டதாக 214 பேருக்கு ரூ.5.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்கள், பிரதான சாலைகள் மற்றும் நீா்நிலைகளின் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டுதல் மற்றும் பதாகைகள் வைப்பதைக் கண்காணிக்கவும் மண்டலத்துக்கு தலா ஒரு குழு வீதம் மொத்தம் 4 சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடா்ந்து 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இக்குழுக்கள் மூலம் இதுவரை 214 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.5,78,500 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அபராதம் செலுத்த மறுத்தவா்களின் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மண்டலம் 2-க்கு உள்பட்ட வாா்டு-31 பகுதியில் அலுவலா்கள் வியாழக்கிழமை ரோந்துப் பணியின்போது, விதிமீறலில் ஈடுபட்ட 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பொது இடங்களில் குப்பை கொட்ட தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இனி தொடா்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் வணிக, தொழில் நிறுவனங்களின் குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

